ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

"யார் தயவுமில்லாமல் வெற்றி பெற்று ஆட்சியில் உட்காருவோம்' என்றால், "எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் ஆட்சியில் அமர்வது' என்று அர்த்தமா?

Advertisment

தேர்தல் கூட்டணி இருக்கும். ஆனால் கூட்டணி ஆட்சி இருக்காது. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் என்பதுதான் தமிழக அரசியல் அகராதியில் உள்ள அர்த்தம்.

ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்

"வடக்கு வாழுது, தெற்கு தேயுது' என்பதன் பொருள்?

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக மருத்துவப் படிப்பிற்காக தென் மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள இடங்களில் வடமாநிலத்தவர் உட்காரும் நிலை உருவாகியுள்ளது. தென் மாநிலங்களின் வளங்களை எடுத்து வட மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறார்கள். மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரியிலிருந்தும் திரும்பக் கிடைப்பது 45 காசுதான். ஆனால், உத்தரபிரதேசமோ 1 ரூபாய் கொடுத்துவிட்டு 1 ரூபாய் 25 பைசாவை மத்திய அரசிடமிருந்து வாங்கிக்கொண்டிருக்கிறது.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

"இலவு காத்த கிளி' எதற்காக நேரத்தை செலவழித்து காத்துக்கொண்டிருக்கிறது?

இலவ மரத்தில் உள்ள காய் பழுக்கும் எனவும், அப்போது அதைக் கொத்தித் தின்னலாம் எனவும் மரத்திலேயே உட்கார்ந்திருக்குமாம் கிளி. ஆனால் அந்தக் காய் பழுக்காது. முற்றியதும் வெடிக்கும், அதிலிருந்து இலவம்பஞ்சு பறக்கும். பழத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கிளி ஏமாறும். ஜெயலலிதா இலவ மரம். சசிகலா கிளி. கடைசியில் இலவம் பஞ்சு மெத்தையில் படுத்தவர் எடப்பாடி.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

madavanஅதிரடி-ஆடம்பர அரசியலில் எப்படித் தாக்குப்பிடித்து நின்றார் மறைந்த முன்னாள் அமைச்சர் செ.மாதவன்?

அண்ணா வளர்த்த அரசியலில் செயல்பாட்டாளர்களும் உண்டு. சிந்தனையாளர்களும் உண்டு. சிந்தனையால் அண்ணாவின் உள்ளத்தில் இடம் பெற்றதுடன் 1967-ல் அவரது அமைச்சரவையிலும் இடம்பிடித்த பெருமைக்குரியவர் செ.மாதவன். பரபரப்பு -ஆடம்பர -அதிரடி அரசியலுக்கு ஆட்பட விரும்பாத நாவலர் நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோரின் வரிசையில் மாதவனுக்கும் இடம் உண்டு. காரியகாரணங்களை ஆராய்ந்து செயல்படுபவர். கச்சத்தீவை தாரை வார்க்கும் பிரதமர் இந்திராகாந்தியின் முயற்சிக்கு எதிராக கலைஞர் ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை டெல்லிவரை கொண்டு சென்று, தடுப்பரண் போட்டதில் மாதவனின் பங்கு முக்கியமானது. அதிகாரத்திற்கு ஆசைப்படாத காரணத்தால், அமைதியாகவே தன் அரசியல் பணிகளைக் கடைசிவரை செய்துவிட்டு விடைபெற்றிருக்கிறார்.

தூயா, நெய்வேலி

காவிரி உரிமைக்காக மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பும் தமிழ்நாட்டு கட்சிகள், அதனை கர்நாடக ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உணர வைத்திருக்கின்றனவா?

Advertisment

malavalianswer

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது எனினும், கர்நாடகாவின் அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தின் உரிமைக்கு எதிராக நிற்கின்றன. இந்த நிலையில், தலித் உரிமை, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்புரிமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சோனியா, ராகுல் என அனைத்து எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகை ஏந்தி போராடியபோது, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி பதாகை பிடித்து நின்றார். அவருக்குப் பக்கத்தில் நின்றவர் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே. திருச்சி சிவாவின் கையில் இருந்த பதாகையைப் பார்த்து கார்கே முகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பு, தமிழகத்தின் மொத்த உணர்வையும் கர்நாடகாவுக்கு உணர்த்துவதுபோல இருந்தது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சி அமைப்புகள் எப்படி இருக்கின்றன?

பிரதிநிதிகள் இருந்தபோதே குப்பைத்தொட்டியாக இருந்தவை. இப்போது நெருங்கவே முடியாதபடி நாற்றமடிக்கும் நிலைக்கு மாறியிருக்கின்றன.

ஆன்மிக அரசியல்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

ஆன்மிக அரசியலால் சமஸ்கிருத ஆதிக்கம் பெற்று தமிழ் பின்னுக்குத் தள்ளப்படுமா?

காலம் காலமாக அப்படித்தான் நடக்கிறது. அதனை எதிர்கொண்டு, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் நிலைநிறுத்துவதற்கான உரிமைப் போராட்டங்கள் ஒவ்வொரு காலத்திலும் நடந்துள்ளன. தற்போது ஆன்மிக அரசியல் பற்றிப் பேசும் ரஜினிகூட, சினிமா டயலாக்கில்தான் "மகிழ்ச்சி' என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவார். தன்னுடைய இயல்பான பேச்சில், "சந்த்த்'தோஷம் என சமஸ்கிருதத்தை அழுத்தமாக உச்சரிப்பார். ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தொண்டர்கள் தங்களுக்குள் பேசும்போது ஒருவருக்கொருவர் மரியாதை தரும் வகையில் "ஜி' போட்டுத்தான் பேசுவார்கள். "என்னஜி... எப்ப வந்தீங்கஜி' என்கிற அவர்களின் வடமொழி வழக்கம் இப்போது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழக இளைஞர்கள் பலரிடமும் தொற்றிக் கொண்டுவிட்டது. "அய்யா' என்று தமிழில் சொன்னால் கிராமத்தான்போல இருக்கிறது அல்லது கிழட்டுத்தனமாக இருக்கிறது என நினைக்கும் இளைய தலைமுறை வடமொழி "ஜி'யைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது. பிறந்த நட்சத்திரம் மற்றும் நியூமராலஜி அடிப்படையில் குழந்தைக்குப் பெயர் வைப்பதிலேயே சமஸ்கிருதம் நுழைந்துவிடுகிறது. தமிழ்நாட்டுக் குழந்தைகளில் 90% பேருக்கு சமஸ்கிருதப் பெயர்கள்தான் சூட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே இப்படிப் பலவகைகளில், ஏதுமறியா மனங்களில் சமஸ்கிருதத்தை நுழைத்துக்கொண்டிருக்கிற வாழ்க்கைச் சூழலில், ஆன்மிகத்தை முன்வைத்து நடத்தப்படும் அரசியல் இத்தகைய வேற்றுப்பண்பாட்டை தமிழ்நாட்டில் கட்டாயமாக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.